நாமக்கல்

இன்று சர்வதேச தற்கொலை தடுப்பு தினம்

10th Sep 2019 10:38 AM

ADVERTISEMENT

சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனம் செப். 10-ஆம் தேதியை சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. உலகில் ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை எண்ணத்தை ஒரு நோயாகக் கருதி சிகிச்சை எடுத்துக்கொண்டால், விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றலாம். 
காரணங்கள்: மாணவர்களின் படிப்பு தோல்வியை விட, இரு மடங்கு காதலுக்காக தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலை என்பது ஒருவன் சொந்த முடிவாக இருந்தாலும், முக்கியமாக இருப்பது சமுதாயப் பிரச்னைகள். நிறைவேறாத ஆசைகள், தேவைகள், விரக்தியான வாழ்க்கை, முடிவெடுக்க இயலாத நிலை, பிரச்னைகளை கையாள முடியாத சூழ்நிலை, அவமானம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள், குற்ற உணர்வு, உடல்ரீதியாக வலியுடன் கூடிய கடுமையான நீண்ட கால வியாதி, உணர்வு ரீதியாக மற்றும் மன ரீதியாக அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகள், பதட்டமான சூழ்நிலைகள், பொருளாதாரச் சிக்கல்கள், விரும்பத்தகாத சூழ்நிலைகளில் வாழ்தல், சமூக ரீதியாக தனிமைப்படுதல் உள்ளிட்டவை.
ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்: உங்களுக்குள், குடும்பத்தில், நண்பர்களிடத்தில் மற்றும் உங்கள் சக ஊழியரிடம் என்ன நிகழ்கிறது என்பதைக் கவனியுங்கள். ஏதாவது மாற்றத்தை நீங்கள் கவனித்தால், நெருங்கிச் சென்று உரையாடலைத் தொடங்குங்கள். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் யாரையாவது உங்களுக்கு தெரியுமானால், அவர்களோடு பேசுங்கள், திறந்த மனதோடு அவர்கள் கூறுவதை கேளுங்கள் மற்றும் உங்கள் ஆதரவை அவருக்கு அளியுங்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தற்கொலையின் எதிர்விளைவாக பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்யும் முயற்சிலும் ஈடுபடுகின்றனர். 15 முதல் 29 வயதுடையோர் மத்தியில் தற்கொலை எண்ணம் அதிகம் உள்ளது. தற்கொலையைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின்  முக்கியக் கருத்தாகும். 
தற்கொலை தவிர்ப்பும், மனநல மருத்துவமும்: ஒருவர் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டு அவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அறிந்து கொள்ள வேண்டும். அவர், மன அழுத்தத்துடனோ, மனச்சோர்வுடனோ, மனப்பதட்டத்துடனோ,  மனக்குழப்பத்துடனோ இருக்கிறார் என சம்பந்தப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ புரிந்துகொண்டு, உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் உடனடியாக மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தேசிய நலவாழ்வுத் திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்டம் மூலம் அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்கொலை தடுப்பு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 
தற்கொலை எண்ணங்களும், முயற்சிகளும் மனநோயின் அறிகுறிகள். தாழ்வு மனப்பான்மை நீக்கி தன்னம்பிக்கை வளர்த்து தற்கொலையைத் தவிர்க்க  வேண்டும் என்கிறார் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் மனநல ஆலோசகர் சி.ரமேஷ்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT