நாமக்கல்

முதல்வர் குறை தீர்க்கும் முகாமில் 5,683 மனுக்கள்: அமைச்சர் வெ.சரோஜா தகவல்

7th Sep 2019 09:43 AM

ADVERTISEMENT

ராசிபுரம் வட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள முதலமைச்சர் குறை தீர்க்கும் முகாம்களில், 5,683 மனுக்கள் வந்துள்ளதாக சமூக நலத் துறை அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா கலந்து கொண்டார். அவர், பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றார்.  
அதன்பின், அமைச்சர்
பேசியது;   பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் பொருட்டு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்,  கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து,  நாமக்கல் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  இம் முகாமானது, அரசாங்கமே மக்களை நோக்கி சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படக் கூடிய திட்டமாகும். இத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தீர்வு காணப்பட உள்ளது.
ராசிபுரம் வட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி 1,924 மனுக்களும், முதியோர் ஓய்வூதியத் தொகை வேண்டி 2,974 மனுக்களும்,  சாலை வசதி வேண்டி 60 மனுக்களும், குடிநீர் வசதி வேண்டி 51 மனுக்களும்,  674 இதர மனுக்கள் என மொத்தம் 5,683 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.  இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில்,  சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன்,  ராசிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் எஸ்.பி.தாமோதரன்,  வெண்ணந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.என்.கே.பி.செல்வம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT