நாமக்கல்

புதிய காவிரி குடிநீர் திட்டம்: குழாய்கள் பதிக்கும் பணி மும்முரம்

7th Sep 2019 09:39 AM

ADVERTISEMENT

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து, நாமக்கல் நகராட்சிக்கு விநியோகிப்பதற்கான புதிய குடிநீர் திட்டத்தில், முக்கிய சாலைகளில், குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் நகராட்சியில் 30 வார்டுகள் என்பது 39 வார்டுகளாக, கடந்த 2011-ஆம் ஆண்டு  அதிகரிப்பு செய்யப்பட்டது. இதில், நாமக்கல்லை ஒட்டிய கிராமங்களான முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி, கொசவம்பட்டி, கொண்டிச்செட்டிப்பட்டி,  பெரியப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், காவேரிப்பட்டி, தும்மங்குறிச்சி உள்ளிட்டவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டன.  நகராட்சி முழுவதும் 22,110 குடியிருப்புகளுக்கும், 1,802 வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து 10.5 மில்லியன் லிட்டர் தினமும்  குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு நகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதியதாக கிராமங்கள் இணைந்து வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால்,  ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலமாக நாமக்கல்லுக்கு குடிநீர் எடுத்து வரும் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மூன்று ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது.  பொதுமக்கள் பங்களிப்புடன், அப்போது ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் 24 மில்லியன் லிட்டர் நீரை எடுத்து வருவதற்கான  பணிகள் தொடங்கப்பட்டன.  நிதி ஒதுக்கீடு தாமதமானதால் பணிகள் முடிவடைவதில் கால தாமதம் ஏற்பட்டது. அதன்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கத்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டன. 
நாமக்கல்- மோகனூர் சாலை,  பரமத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் குழாய் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  தற்போதைய நிலையில் 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.  குழாய் வழியாக வரும் நீரை சுத்திகரிப்பதற்காக தும்மங்குறிச்சியில் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.  அதேபோல்,  கபிலங்குறிச்சி, நல்லிபாளையம் உள்ளிட்ட இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.185.24 கோடியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், கால தாமதத்தால் தற்போதைய சூழலில் ரூ.300 கோடியை கடந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  இத் திட்டத்திற்கு அரசு தரப்பில் 10 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் பணிகளை நிறைவு செய்து 2020 ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது;  ஜேடர்பாளையம் குடிநீர் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  தற்போது 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைப் பகுதிகளில் போக்குவரத்தை மாற்றியமைத்து குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணிகள் முடிவடைந்தவுடன் தோண்டப்பட்ட இடங்களில் புதியதாக சாலைகள் அமைக்கப்படும் என்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT