நாமக்கல்

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

7th Sep 2019 09:44 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன  ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருள்அரசு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வேலூர்,  நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடந்த நான்கு நாட்களாக சோழசிராமணி, ஜேடர்பாளையம், வேலூர்,  மோகனூர் உள்ளிட்ட பகுதியில் காவிரியாற்றில் கரைத்தனர்.  இந்து முன்னணி சார்பில் பரமத்தி வேலூர்,கபிலர்மலை,பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர்,வெங்கரை,பாலப்பட்டி மற்றும் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 58 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பரமத்தி வேலூர் கொண்டு வரப்பட்டன. 
பின்னர் கடைவீதியில் நடைபெற்ற 19-ஆம் ஆண்டு இந்து எழுச்சி திருவிழா பொதுக்கூட்டத்திற்கு பிறகு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.  இதில் பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் மணிராஜ் வரவேற்றுப் பேசினார்.  இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினர். பொன்னர்சங்கர் குழுமத்தின் தலைவர் சங்கர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  முடிவில் இந்து முன்னணி பரமத்தி ஒன்றிய தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருள்அரசு தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT