நாமக்கல்

வாகன விபத்து நிவாரண முறையில் மாற்றம்: 1,000 வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

மோட்டார் வாகன விபத்து வழக்கில் நிவாரணம் பெறும் முறையை, சென்னை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தவுடன், நிவாரணத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வைப்பீடு செய்யும். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள், நீதிமன்றம் மூலமாக அந்தத் தொகையை நேரடியாகப் பெற்று வருகின்றனர்.
 தற்போது, உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "நிவாரணத் தொகையை வங்கியில் வைப்பீடு செய்து, அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் தங்களது மருத்துவச் செலவுக்காகவும், இடைப்பட்ட காலத்தில் வேலை செய்ய முடியாத நிலையில் பிறரிடம் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிப்பவர்கள், இந்த நடைமுறையால் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் பேர் நீதிமன்றங்களில் செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்பில்
 ஈடுபட்டனர்.
 இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலுர், திருச்செங்கோடு நீதிமன்றங்களில் உள்ள ஆயிரம் வழக்குரைஞர்கள் தங்களது பணியை புறக்கணித்தனர்.
 தங்களது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்காதபட்சத்தில், வரும் 14-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுத் துணைத் தலைவர் பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT