நாமக்கல்

"மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை உருவாக்க வேண்டும்'

4th Sep 2019 09:33 AM

ADVERTISEMENT

வீடுகளிலும், தெருக்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை உருவாக்க வேண்டும் என்று ஜல் சக்தி அபியான் திட்ட பொறுப்பு தலைவர் எஸ்.அனு தெரிவித்தார்.
 மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், கண்காட்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எஸ்.அனு பேசியது; -
 நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. தற்போதைய சூழலில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்கு ஆயிரம் அடிக்கும் மேல் துளையிட வேண்டியது உள்ளது. மழை நீர் நிலத்தடியில் தடையின்றி செல்லும்பட்சத்தில், குறைந்த அடியிலேயே தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடுகளிலும், தெருக்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்க வேண்டும்.
 நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழை நீர் நிலத்தின் கீழ் செல்லும் வகையிலான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் பேசியது:-
 நிலத்தடி நீர்மட்டம் தமிழகத்தில் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பொதுமக்கள் தாங்களாக முன்வந்து மழை நீரை சேமிக்க பழகிக் கொள்ள வேண்டும். எந்தவித பிரச்னையானாலும் பொதுமக்கள் நேரடியாக என்னை சந்திக்கலாம் என்றார்.
 முன்னதாக, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்பேரணி, திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக பூங்கா சாலையில் நிறைவடைந்தது. அதில், நீர் சேமிப்பு தொடர்பான வாசகங்கள் பதாகைகளில் அதிகம் இடம் பெற்றிருந்தன. பொதுமக்களுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜே.சேகர், நகராட்சி ஆணையாளர் கே.எம்.சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT