நாமக்கல்

போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.2.35 லட்சம் அபராதம்: காவல் கண்காணிப்பாளர் தகவல்

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

உயர்த்தப்பட்ட அபராத கட்டண அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.2.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார்.
 போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, மத்திய அரசு உயர்த்திய அபராதத் தொகை விதிக்கும் நடைமுறை நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, தலைக்கவசம், இருக்கை பெல்ட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 இந்த நிலையில், நாமக்கல் நகரில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். சிலர் தங்களிடம் பணம் இல்லை என போலீஸாரிடம் கவலையுடன் கூறினர். போலீஸார் வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், அபராதத் தொகையை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லும்படி அறிவுறுத்தினர். மேலும், அபராதக் கட்டணம் உயர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.
 ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ.ஆயிரம், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளிடம் போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
 இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறியது;-
 முதல் நாளில் 235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அனைவரும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி அபராதம் விதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT