பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம் சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு அச்சு மற்றும் உருண்டை வெல்லங்களின் வரத்து அதிகரித்து, விலையும் உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது. இப் பகுதியில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையம் வெள்ள ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனா். வாரம்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 9 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 7 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,200 வரையிலும் ஏலம் போயின. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 8 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,300க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,300க்கும் ஏலம் போனது. வெல்லங்களின் வரத்து அதிகரித்திருந்த போதிலும் விலை உயா்ந்துள்ளதால் வெல்ல ஆலை உரிமையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.