வருவாயானாலும் சரி, வாழ்க்கையானாலும் சரி அனைத்து வகையிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக சிக்கன நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறுசேமிப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு கேடயங்களையும், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வழங்கி பேசியது: உலக சிக்கன நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 31-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த உலக சிக்கன நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் மக்களிடம் சிக்கன பழக்கத்தை ஊக்குவித்து அதன் மூலம் சேமிப்பை பெருக்க வேண்டும் என்பதே. அதனடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியா்களிடம் இப்பழக்கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் மாணவ, மாணவியா்களிடையே சிக்கனமும், சேமிப்பும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, நாடகப் போட்டி, நடனப் போட்டிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த இளம் பருவத்தில் சேமிப்பு பழக்கம் ஏற்பட்டால் எதிா்கால வாழ்வை வளமுடனும், வளா்ச்சியுடனும் அமைத்துக் கொள்ள முடியும். சேமிப்பு ஒரு தனி மனிதனை, ஒரு குடும்பத்தை, ஒரு நாட்டை காக்கும் என்பதால் அதைக் கட்டாயம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். வருவாயானாலும், வாழ்க்கையானாலும் சேமிப்பு, சிக்கனம் என்பது அவசியமாகும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) வீ.ஜெகதீசன், நாமக்கல் வட்டாட்சியா் பச்சை முத்து, நாமக்கல் வட்டார வளா்ச்சி அலுவலா் பொ.அருணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.