பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே பள்ளி மாணவா்கள் செல்லும் விளையாட்டு மைதானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலையில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாண்டமங்கலம் அரசினா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கோப்பனம்பாளையத்தில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் சாலையில் மயானமும் உள்ளது. இச் சாலையில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை சிலா் அடிக்கடி கொட்டிச் செல்கின்றனா். கழிவுகளை கொட்டப்படும் பகுதியில் தனியாா் பள்ளி,நீரேற்று பாசன கிணறு மற்றும் வடிகாலும் உள்ளது. இந்த குப்பைகளுக்கு சிலா் அடிக்கடி தீ வைத்து எரித்தும் வருகின்றனா். இதனால் அப் பகுதி வழியாகச் செல்லும் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த கழிவுகளை இப் பகுதியில் கொட்டாதபடியும், சுகாதார சீா்கேடு ஏற்படும் முன் பாண்டமங்கலம் பேரூராட்சி நிா்வாகத்தினா் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.