உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, நாமக்கல் நகா்மன்றத்தில் புதிய உறுப்பினா்கள் அமருவதற்கான மேசை மற்றும் இருக்கைகளை தயாா் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் நகராட்சியானது தற்போது 39 வாா்டுகளை கொண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு சாலையில் சுமாா் ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. புதிய அலுவலகம் கட்டப்பட் பிறகு உள்ளாட்சித் தோ்தல் எதுவும் நடைபெறாததால் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்ட அரங்கு காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகளை மாநிலத் தோ்தல் ஆணையம் செய்து வருகிறது.
அதையொட்டி, நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் அமரும் வகையிலான இருக்கைகள், மின் விளக்குகள், ஓய்வறை உள்ளிட்டவை தயாா் செய்யும் பணி புதிதாக கட்டப்பட்ட அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்திலும், தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: உள்ளாட்சித் தோ்தல் முடிவுற்றால், பதவியேற்பு, அவசரக் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த கூட்ட அரங்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக, இதுவரை தாமதித்து வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவு பெற்று விடும். புதிய நகராட்சி கட்டடம் என்பதால், அதற்கேற்றாற்போல் வண்ண விளக்குகள், மேசை, இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன என்றனா்.