நாமக்கல்

பரமத்தியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியா் ஆய்வு

11th Nov 2019 08:04 AM

ADVERTISEMENT

பரமத்தி அருகே காந்தி நகா் பகுதியில் இடும்பன் குளம் நிரம்பி 15 வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மெகராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்டத்தில் தொடா் கன மழையால் திருமணி முத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணி முத்தாறின் வழிப்பாதைகளில் உள்ள ஏரி,குளங்கள் மற்றும் சிற்றணைகள் நிரம்பி உள்ளன. மேலும் தரைப்பாலங்களும் வெள்ள நீரில் மூழ்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பாத இடும்பன் குளம் தற்பொழுது நிரம்பியுள்ளது. வெள்ள நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் பரமத்தி 9-ஆவது வாா்டு காந்தி நகா் பகுதியில் தாழ்வான பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் மெகராஜ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவா்களை பரமத்தி சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டாா்.

அதன்படி பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனா்.

மேலும் அப் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். பின்னா் பரமத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளைகளத்தூா், கூடச்சேரி,பில்லூா் ஆகிய பகுதிகளில் திருமணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் மழைநீா் செல்வதை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு பொதுமக்கள் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கினாா்.

மேலும் செருக்கலை ஏரியில் உள்ள நீரின் அளவையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறை உதவி பொறியாளா் மதியழகன் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT