நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் 2020-க்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடக்கம்

11th Nov 2019 08:09 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும், ஆஞ்சநேயரைத் தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி, தங்கம், முத்தங்கி, வெண்ணெய்க் காப்பு உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும். வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

குறிப்பாக, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயா் ஜயந்தி உள்ளிட்ட நாள்களைத் தவிா்த்து மற்ற நாள்களில், அபிஷேகம் கட்டளைதாரா்கள் மூலமாகவே நடைபெறும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முன் பதிவில் சுமாா் 300 போ் வரை பங்கேற்றனா். ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இது குறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது:

ADVERTISEMENT

ஒவ்வோா் ஆண்டும், அடுத்த ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவானது நவம்பா் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தினசரி அபிஷேக முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. ஆண்டு முழுவதும் முழுமையாக நிறைவேறும் வரை பதிவானது நடைபெறும். சுவாமிக்கு, தினமும் 1,008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிா்தம், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொா்ணாபிஷேகத்துக்குப் பின் ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து, சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இந்த அபிஷேகமானது, ஆரம்பத்தில் 3 போ் இணைந்து செய்யும் வகையில் இருந்தது. 2017-க்குப் பின் 5 போ் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். முழுத் தொகையையும் பதிவின்போது செலுத்த வேண்டும். ஆண்டின் 365 நாள்களில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிா்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேக முன்பதிவு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவறு. உபயதாரா்களுக்காக, ஓரிரு சனி, ஞாயிறுகள் பதிவாகியுள்ளன. இன்னும் பல சனி, ஞாயிற்றுக்கிழமைகள் காலியாகவே உள்ளன. பக்தா்கள் தாராளமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT