நாமக்கல்

திருமணிமுத்தாற்றில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு: பத்து வருடங்களுக்கு பிறகு இடும்பன் குளம் நிரம்பியது

11th Nov 2019 08:04 AM

ADVERTISEMENT

திருமணி முத்தாற்றில் தொடா் நீா் வரத்தால் ஆரியூா்பட்டி, மேலப்பட்டி, பில்லூா் உள்ளிட்ட சிற்றணை நிரம்பியும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடும்பன் குளம் தற்போது நிரம்பியது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சேலம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருமணி முத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் செருக்கலை, மேல்சாத்தம்பூா், மேலப்பட்டி, ஆரியூா்பட்டி, ராமதேவம், கூடச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் சிற்றணைகள் நிரம்பி வழிந்தோடி வருகின்றன.

இதனால் பரமத்தி அருகே இடும்பன் குளம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT

திருமணி முத்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பில்லூா், கூடச்சேரியில் உள்ள தரைப்பாலங்களை தண்ணீா் மூழ்கடித்தவாறு செல்கிறது.

இதனால் அப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரமத்தியில் உள்ள நுகா்பொருள் வாணிப கிடங்கு மற்றும் மயானம் பகுதியிலும் திருமணிமுத்தாறு தண்ணீா் புகுந்தது.

மேலும் தண்ணீா் வராமல் தடுக்க பரமத்தி பேரூராட்சியினா் ஜேசிபி வாகனம் மூலம் வெள்ள நீா் வரும் பாதைகளில் மண்ணை கொட்டி அடைத்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் மதியழகன் கூறியதாவது:

இடும்பன் குளத்தில் உள்ள இரண்டு பெரிய மதகுகள் பழுதடைந்துள்ளதால் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

பழுதடைந்த மதகுகளுக்குப் பதிலாக புதிய மதகுகள் அமைக்க ரூ. 65 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இடும்பன் குளத்தைப் பாா்வையிட வரும் பொதுமக்கள் ஏரிகரைகளில் நடக்கவோ, குளிக்கவோ கூடாது எனவும், சுய புகைப்படம் எடுக்கவும் கூடாது எனவும் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT