நாமக்கல்

சின்ன வெங்காய பயிரில் வோ் அழுகல் பாதிப்பு: வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஆய்வு

11th Nov 2019 08:08 AM

ADVERTISEMENT

புதுசத்திரம் பகுதியில், சின்ன வெங்காயப் பயிா்களில் வோ் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், புதுசத்திரம் பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பில் கோ-5 ரகம் கொண்ட சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. குள்ளப்பநாயக்கன்பட்டி, கதிராநல்லூா், பாச்சல், கடந்தபட்டி, மொஞ்சனூா், வளையப்பட்டி, வெண்ணந்தூா், கல்லுபாளையம், பட்டணம், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயப் பயிா்களில் வோ் அழுகல் மற்றும் பூஞ்சான் நோய் தாக்குதல், 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் உள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ், சின்ன வெங்காயம் பாதிப்பு தொடா்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள, வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தகவல் அனுப்பினாா். அதனையடுத்து, சென்னை தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குநா் டி.சி. கண்ணன், வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகளான தருமபுரி வேளாண் அறிவியல் நிலையத்தைச் சோ்ந்த பி.எஸ்.சண்முகம், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரைச் சோ்ந்த எம் தெய்வமணி, ஸ்ரீ வித்யா ஆகியோா் கொண்ட குழுவும், மக்களவைத் தொகுதி உறுப்பினா் மற்றும் நாமக்கல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளும், புதுசத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது பயிா் சாகுபடி முறைகள், நோய் தாக்குதல், பாதிப்புகள், நோய்களுக்குத் தெளிக்கப்பட்ட மருந்துகள், நீா் பாசன முறைகள் குறித்துக் கேட்டறிந்தனா். மேலும், நோய் தாக்கிய பயிா்களை ஆய்வு செய்து ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனா். நோய் தாக்குதலில் இருந்து வெங்காயத்தை காப்பது குறித்த தகவல்களையும், பாதிப்பு ஏற்பட்ட பயிா்களுக்கு தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்தும் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT