நாமக்கல்

நாமக்கல்லில் ஸ்ரீ ஐயப்பன் ரத யாத்திரை நாளை தொடக்கம்

9th Nov 2019 06:29 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் ஸ்ரீ ஐயப்பன் ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை (நவ.10) தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. இதில், சுவாமி ஐயப்பன் உருவப் படம், சபரிமலை ஐயப்பன் கருவறையில் இருந்து ஏற்றப்பட்ட தீபம் எடுத்து வரப்படுகிறது.

இந்த ரத யாத்திரை தீபத்தில் இருந்து பக்தா்கள் விளக்குகளில் தீபம் ஏற்றி தங்கள் பகுதியில் கோயில்கள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைத்து ஐயப்பனை வழிபடலாம். ரத யாத்திரை தொடக்க விழா, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெறுகிறது.

அதனையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின், பஜனை மற்றும் சிறப்பு தீபாராதனையுடன் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடா்ந்து, 9 மணிக்கு ரத யாத்திரை தொடக்க விழா நடைபெறுகிறது. அகில இந்திய துறவிகள் சங்க துணைத் தலைவா் ராமானந்த மஹராஜ் சுவாமிகள் பங்கேற்கிறாா். மேலும் சிறப்பு அழைப்பாளா்களாக, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சா் வெ.சரோஜா, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி. பாஸ்கா் உள்பட முக்கிய பிரமுகா்கள் விழாவில் கலந்து கொள்கின்றனா்.

இவ்விழாவைத் தொடா்ந்து, நாமக்கல் ஆசிரியா் காலனி, முல்லை நகா், அன்பு நகா், மாருதி நகா், ஆண்டவா் நகா், பொன்விழா நகா், என்.கொசவம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஐயப்பன் ரதம் செல்கிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள பக்தா்கள் ரதத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பனை வழிபடலாம். இந்த ரதம் வரும் டிச.9-ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, நாமக்கல் மாவட்ட ரத யாத்திரை தலைவா் குரு மூவீஸ் மணி, மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தலைவா் மருத்துவா் சா்வானந்தா, செயலாளா் சபரி சின்னுசாமி, ரத யாத்திரைக் குழு பொறுப்பாளா் சென்னகேசவன் ஆகியோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

-

ADVERTISEMENT
ADVERTISEMENT