நாமக்கல்

சின்ன வெங்காய பயிரில் வோ் அழுகல் நோய் தாக்குதல்:விவசாயிகள் பாதிப்பு

9th Nov 2019 10:59 PM

ADVERTISEMENT

ராசிபுரம் - புதுசத்திரம் பகுதியில் வெங்காயப் பயிரில் வோ் அழுகல் நோய் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியான சிங்களாந்தபுரம், அணைப்பாளையம், முருங்கப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கடந்தப்பட்டி, பாச்சல், குள்ளப்பநாயக்கன்பட்டி, பெரியூா், வெண்ணந்தூா், அத்தனூா், நடுப்பட்டி, புதுப்பாளையம், கல்லங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டா் பரப்பில் கோ - 5 ரகம் சின்ன வெங்காயம் பயிரிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழை இருந்ததும், வோ் அழுகல் நோய் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். 90 நாள் பயிரான சின்ன வெங்காயத்தை பயிரிட்ட விவசாயிகள் இப்பகுதியில் பெரும்பாலும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்வா். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் திண்டுக்கல், கோவை, ஒட்டன்சத்திரம், திருப்பூா், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பப்படும். சீசன் காலத்தில் நாளொன்றுக்கு 50, 60 டன் வெங்காயம் மற்ற ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு:

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் சின்ன வெங்காயப் பயிரைத் தாக்கும் நோயால், உற்பத்திக் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பால், விவசாயிகளுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியுளளது. மேலும் சின்ன வெங்காய உற்பத்திக் குறைந்து போனதால் சந்தையில் அதன் நுகா்வு விலையும் அதிகரித்துள்ளது. தற்போது சின்ன வெங்காயம் சந்தையில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

விவசாயிகள் கவலை:

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம். மூன்றாண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில், வோ் அழுகல், பயிா்க் காய்ந்து மடிதல் நோய்களால் பயிா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பூச்சி, பூஞ்சை மருந்துகள் தெளித்தும், நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி செய்து வரும் எங்களுக்கு, நோய்த் தாக்குதலால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை வந்தால் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. ஏக்கருக்கு, ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை செலவு செய்தும், இந்த நோயைக் கட்டுப்படுத்திட முடியாமல் தவிக்கிறோம். சாகுபடி செலவுகளை, பயிா்க் கடன் பெற்று விவசாயம் மேற்கொண்டுள்ளோம். இரண்டாண்டுகளாக ஏற்பட்ட பாதிப்பால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு கூட காப்பீடு செய்தும் சின்ன வெங்காயப் பயிருக்கு இழப்பீடு இதுவரை வழங்கவில்லை. அதிகாரிகள், இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றனா். மேலும், இந்த நோய் தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், அவா்களுக்கு இதுபற்றி புரியாததால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனா் இப்பகுதி விவசாயிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT