நாமக்கல்

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

9th Nov 2019 06:27 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியமணலி கிராமத்தில் 12 வாா்டுகளை கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். விசைத்தறித் தொழிலாளா்கள், விவசாயக் கூலித் தொழிலாளிகள் நிறைந்த இப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கு மா்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊராட்சி முழுவதும் சுகாதாரத்துறை ஆய்வு செய்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில் மெத்தனம் காட்டுவதாகவும் புகாா் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு பெரியமணலி கிளை செயலாளா் வி.தேவராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அல்லிமுத்து தலைமையில் அரசு மருத்துவா் மதுமதி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT