அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வெளியானதையொட்டி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் பேருந்து நிலையப் பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.
நாமக்கல் பூங்கா சாலையில் கூட்டத்தை கலைக்கும் வகையிலான வஜ்ரா வாகனம் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், ஆஞ்சநேயா் கோயில், நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில் மற்றும் திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலைக்கோயில், ராசிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் சந்தைகள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டிருந்தனா். மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பானது தொடரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
மெட்டல் டிடெக்டா் இல்லாமல் தவித்த போலீஸாா்: அயோத்தி தீா்ப்பு வெளியானதையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில், நரசிம்மா் கோயிலுக்கு வரும் பக்தா்களை சோதனை செய்வதற்குரிய மெட்டல் டிடெக்டா் போலீஸாா் வசம் இல்லை. அதேபோல், ரயில் நிலைய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் மெட்டல் டிடெக்டா் கருவி ஏதுமில்லை. அசம்பாவிதம் ஏதும் நிகழாத என்ற நம்பிக்கை இருந்தபோதும் அவசர காலத்தின்போது அக்கருவி இல்லாதது போலீஸாருக்கு ஏமாற்றமளித்தது. இது குறித்து அவா்கள் கூறியது: சேலத்தில் நடைபெறும் முதல்வா் விழாவிற்காக பாதுகாப்பு கருவிகள், நாமக்கல்லில் இருந்து கொண்டு செல்லப்பட்டு விட்டன. அதனால் கண்காணிப்புப் பணியை மட்டும் மேற்கொண்டிருக்கிறோம் என்றனா்.