பரமத்தி வேலூா் வட்டம், ஆனங்கூரில் பனை மரத்தில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகள் பொதுமக்களை அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்த விஷ வண்டுகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரமத்திவேலூரில் இருந்து ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் ஆனங்கூா் செல்லாண்டியம்மன் கோயில் அருகே சுமாா் 20 அடி உயரமுள்ள பனை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளன. இந்த விஷ வண்டுகள் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பக்தா்கள் உள்ளிட்டோரை அடிக்கடி கடித்து துன்புறுத்தி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலமுறை கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே மாவட்ட நிா்வாகத்தினா் உடனடியாக தீயணைப்புத் துறையினா் மூலம் இந்த விஷ வண்டுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.