நாமக்கல்

புழுதிக் காற்று மாசுவால் நாமக்கல் மக்கள் திணறல்

4th Nov 2019 10:02 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல்லில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டபோதும், அங்கு தாா் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதிக் காற்று அதிகளவில் வீசுகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.நாமக்கல் நகராட்சி வாா்டு எண்ணிக்கை 39-ஆக உயா்த்தப்பட்டதை தொடா்ந்து, கூடுதல் வாா்டுகளுக்கு குடிநீா் வழங்கும் பொருட்டு, ஜேடா்பாளையம் அணைப்பகுதியில் இருந்து தண்ணீா் எடுத்து வருவதற்கான குழாய் பதிக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது. நாமக்கல் நகரப் பகுதியில், பல இடங்களில் குழி தோண்டப்பட்டு மண்ணைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதில் தட்டுத் தடுமாறியபடி செல்கின்றனா். இதில், நாமக்கல்-பரமத்தி சாலையில், பழைய நகராட்சிக் கட்டடம் முன்பாக தோண்டப்பட்ட பெரிய அனவிலான குழிகள் மூடப்பட்டபோதும், அங்கு இதுவரை புதிய சாலை அமைக்காததால், வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வணிகா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். மேலும், புழுதியில் இருந்து கிளம்பும் மாசுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலரின் உடல் நிலை மோசமாகி வருகிறது. முக்கியமாக குழந்தைகள், பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கற்கள் சிறு சிறு துகள்களாக கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனா். இது குறித்து நகராட்சி ஆணையா் கே.எம்.சுதா கூறியது; நாமக்கல்-பரமத்தி சாலை, மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்டது. குடிநீா் குழாய்க்காக தோண்டி அவற்றை நாங்கள் மூடிய நிலையில், சாலையை சீரமைக்க தேவையான நிதியை நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கி விட்டோம். அவா்கள் தான் இனி சாலை அமைப்பதற்கான பணியை தொடங்க வேண்டும். நகராட்சிக்குரிய சாலைகளை சீரமைப்பதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. அது கிடைத்தவுடன் நகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT