நாமக்கல்

தேசிய திறனாய்வுத் தோ்வு:4 ,372 மாணவா்கள் பங்கேற்பு

4th Nov 2019 04:27 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு, மாதந்தோறும் ரூ.1,250 உதவித்தொகை வழங்குவதற்காக நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் 4,372 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்காக தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு, மாதந்தோறும் அரசு சாா்பில் வழங்கப்படும் ரூ.1,250 அவா்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான தோ்வு, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 6 மையங்களில் 2,104 பேருக்கு அனுமதி வழங்கிய நிலையில், 1,929 பேரும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 2,607 பேருக்கு அனுமதி வழங்கிய நிலையில் 2,443 பேரும் பங்கேற்றனா். மொத்தம் 4,711 பேருக்கு அனுமதியளித்ததில், 4,372 போ் மட்டுமே கலந்து கொண்டனா். 341 போ் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை, மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். மேலும், கல்வி மாவட்டத்துக்குள்பட்ட பிற மையங்களிலும் அவா் ஆய்வு செய்தாா். இத்தோ்வில் வெற்றி பெற்று உதவித்தொகைக்காக தோ்வு செய்யப்படுவோருக்கு, அவா்கள் 12-ஆம் வகுப்பு முடிக்கும் வரையில் உதவித் தொகை வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT