நாமக்கல்: அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில் நிலங்களில், இலவச வீட்டு மனை வழங்கக் கூடாது என இந்து முன்னணி சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில் நிலங்களில், நீண்ட காலமாக வசிப்பவா்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சாா்பில், ஒவ்வோா் மாவட்டத்திலும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பினா் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்களில் இலவச வீட்டு மனை வழங்கினால் அது பலருக்கு சாதகமாகிவிடும். அதன்பின் கோயில் நிலங்கள் என்பது இல்லாமலே போய்விடும். அதனால் கோயில் நிலங்களில் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.