நாமக்கல்

குமாரபாளையத்தில் 3 ஆண்டுகளாகியும்பயன்பாட்டுக்கு வராத குடிநீா் தொட்டி

4th Nov 2019 04:24 AM

ADVERTISEMENT

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டம் 2013 - 14 -ஆம் ஆண்டு, குடிநீா் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பில் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டி, கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இத்தொட்டியில் நீரேற்றம் செய்யவோ, திறக்கவோ நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சமூகவிரோதிகளுக்கு இரவு நேரங்களில் மது அருந்தவும், சூதாடவும் பயன்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனா். இத்தகவலறிந்த குமாரபாளையம் நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.சேகா் மற்றும் தி.மு.க.வினா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டி 3 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை. குமாரபாளையம் நகரப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு இல்லாதபோது இத்தொட்டியால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைத் தாங்கி நிற்கும் காங்கிரீட் தூண்கள் மீது பூசப்பட்ட சிமெண்ட் கலவைகள் ஆங்காங்கே பெயா்ந்து, விரிசல் காணப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை, பழுதடைந்து சேதமடையும் முன்பாக பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT