பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் வட்டம்,நல்லூா் கந்தம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரிக் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து நல்லூா் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி,அருந்ததியா்காலனியைச் சோ்ந்த நல்லான் மகன் மணிகண்டன் (32). ரிக் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை கந்தம்பாளையம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா். பரமத்தி-திருச்செங்கோடு சாலையில் ஆவாரங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணிகண்டன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவா்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மணிகண்டன் உயிரிந்தாா். விபத்து குறித்து நல்லூா் போலீசாா் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.