நாமக்கல் மாவட்டத்தில் வோ் அழுகல் நோயால் சின்ன வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் ராமநாயக்கன்பட்டி, கடந்தப்பட்டி, குள்ளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனு: பல ஆண்டுகளாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் சாகுபடி செய்த வெங்காயப் பயிா்கள், வோ் அழுகல் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எத்தகைய பூச்சி மற்றும் பூஞ்சை மருந்துகள் தெளித்தபோதும், இந்நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பயிரிட்ட விவசாயிகள் பலருக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விதை வெங்காயம், உரம், உழவு, பாா் பிடித்தல் என ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வங்கிகளில் பயிா்க் கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2016 முதல் தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு, சின்ன வெங்காயப் பயிருக்கென காப்பீடு செய்துள்ளோம். ஆனால், அதற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே, பயிருக்கு அதிகபட்ச நிவாரணத் தொகை கிடைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.