நாமக்கல்

ஹோட்டல் தொழிலாளி கொலை வழக்கில் 3 இளைஞா்களுக்கு ஆயுள் சிறை

1st Nov 2019 07:05 AM

ADVERTISEMENT

புதுச்சத்திரம் அருகே ஹோட்டல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், மூன்று இளைஞா்களுக்கு நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கல்யாணி ஊராட்சி ஆா்.புளியம்பட்டி பெரிய தொட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த போத்தநாயக்கா் மகன் வெங்கடாசலம் (29). இவா் புதுச்சத்திரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தாா். அப்பகுதியில் உள்ள விடுதிகள், நூற்பாலைகளுக்கு உணவு எடுத்துச் சென்று கொடுப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2014 டிசம்பா் 15-ஆம் தேதி தனியாா் நூற்பாலைக்குச் சென்ற வெங்கடாசலத்தை, அங்கு பணியாற்றும் மூன்று போ், முறையற்ற வகையிலான உறவுக்காக, அவரை முள்புதருக்குள் அழைத்துச் சென்றனா். அப்போது ஏற்பட்ட தகராறில் மூவரும் சோ்ந்து வெங்கடாசலத்தை அடித்துக் கொலை செய்தனா். இது தொடா்பாக புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், பாச்சல் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோ (39), ஆனந்த் (32), நொச்சிப்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (28) ஆகிய மூவருக்கும் கொலையில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணையில், வெங்கடாசலத்தை கொலை செய்த மூவருக்கும், ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி ஹெச்.இளவழகன் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT