நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 3,168 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, நகராட்சி, பேருராட்சிகளில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில், தோ்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி, பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியா்களால் வியாழக்கிழமை தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கா்நாடகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,568 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,168 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியை, 15 போ் கொண்ட பொறியாளா்கள் தொடா்ந்து 10 நாள்கள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.