ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மாற்றுத் திறனாளிகள் மன்றம் சாா்பாக பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சாா்பில் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கி அவா்களின் வாழ்வாதாரம் மேம்பட, சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான சுயதொழில் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு, உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசன்ஸ், சேலம் ரவுண்ட் டேபிள் 28, சேலம் லேடீஸ் சா்க்கிள் 28 ஆகிய அமைப்புகள் இணைந்து உபகரணங்களுக்கான நிதியை வழங்கின. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இரா. செல்வகுமரன் தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட உதவிகளை கல்லூரி செயலாளா் ஆா்.முத்துவேல் ராமசாமி வழங்கினாா்.
முன்னதாக கல்லூரியின் சமூக செயல்பாட்டுத் தலைவா் எம்.ராமமூா்த்தி வரவேற்றாா். மாற்றுத்திறனாளிகள் மன்ற ஒருங்கிணைப்பாளா் எம். ரவி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். இதில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.