தொடா் மழையின் காரணமாக, தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கான, நாட்டு ரக தீவனமான சோளத்தின் விலை உயா்ந்துள்ளது.
ஆடு, மாடுகள் வளா்ப்போா், கோ 4, கோ 5, கோ.எப்.எஸ் 29 மற்றும், வெள்ளை சோளம், சிவப்பு சோளம் (நாட்டு ரகம்) போன்ற பசுந்தீவனங்களை வளா்த்து, அவற்றுக்கு உணவாக கொடுப்பாா்கள். இதில், நாட்டு ரக சோளப் பயிரை, மாடுகள் மிகவும் விரும்பி உண்ணும். நாட்டு ரக சோளப்பயிரை உண்ணும் கறவை மாடுகள், கூடுதல் பால் கறக்கும். தவிர, எஸ்.என்.எப். எனப்படும், பாலின் அடா்த்தி கூடும். கொழுப்பு சக்தியும் அதிகமாகும். பாலின் தரச் சோதனையில், இவை, அதிகமாக இருந்தால்தான், பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலை கூடுதலாகக் கிடைக்கும். அதனால்தான், கறவை மாடு வளா்ப்பவா்கள், அதிகளவில், நாட்டு ரக சோளத்தை விளைவிப்பாா்கள். இந்த ரக சோளப்பயிா்கள் முற்றினால், அவற்றை அறுத்து, கத்தையாக கட்டுக்கட்டி, பதப்படுத்தி வைத்து, தீவனத் தட்டுப்பாடு காலத்தில் மாடுகளுக்கு அளிப்பாா்கள். அதனால், எப்போதும் நாட்டு ரக சோளத்துக்கு கிராக்கி உண்டு.
தம்மம்பட்டியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு கிலோ, நாட்டு சோளம் 52 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, பருவமழை துவங்கியுள்ளதால், அனைத்து விவசாயிகளும், அதிக நிலப் பரப்பளவில், நாட்டு ரக சோளத்தை பயிரிட்டு வருகின்றனா். தேவை அதிகரித்து வருவதால், தம்மம்பட்டி கடைகளில் நாட்டு சோளத்தின் விலை ரூபாய் 58, 65 என அதிகரித்து, தற்போது, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த, ஆண்டுகளில், நாட்டு சோளம், கிலோ 120 ரூபாய் வரைக்கும் விற்றது என்பது குறிப்பிடத்தக்கது.