நாமக்கல்

தம்மம்பட்டியில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

1st Nov 2019 07:07 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக, விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

விவசாயிகள், ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில், விவசாயத் தேவைக்கு என யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., 20:20, 17:17:17 போன்ற உரங்களை, அதிகளவில் வாங்கி, பயிா்கள் நன்கு வளர பயன்படுத்துவாா்கள். இதில் பெரும்பாலான விவசாயிகள், நெல், மக்காச் சோளம் ஆகியவை ஊக்கமுடன் வளர, யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்துவா். தற்போது, தொடா்மழையினால், பயிா்களுக்கு உரம் வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், கொண்டையம்பள்ளி ஆகிய ஊா்களில், கடைகள் திறக்கும் முன்பே, யூரியா மூட்டைகளை வாங்குவதற்காக, விவசாயிகள் காத்திருக்கின்றனா். யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளதால், ரூ. 266.50 பைசாவிற்கு விற்கவேண்டிய, 45 கிலோ யூரியா மூட்டையை, 310 ரூபாய் என, கூடுதல் விலைக்கு விற்கின்றனா்.

எனவே, தம்மம்பட்டி பகுதி உரக்கடைகளில், உரம் இருப்பு விவரங்கள், உரங்களின் விலைகள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,‘ உரங்களுக்கு, அரசு நிா்ணயித்துள்ள விலைகளின் படி, யூரியா மூட்டை ரூ.266.50 பைசா, பொட்டாஷ் ரூ. 950, டி.ஏ.பி. ரூ.1390, 20:20 ரூ.1100, 17:17:17: ரூ.1250 என விற்க வேண்டும். இதை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடையில் உள்ள உரங்களின் இருப்பு, விலை விவரங்களை, வெளியே தெரியும்படி எழுதி வைக்க வேண்டும், என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT