தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் மூலம் விடுபட்ட கல்வியை தொடரலாம்: ஆட்சியர் மு.ஆசியா மரியம்

தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் மூலம், விடுபட்ட கல்வியை மீண்டும் தொடர மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்தெரிவித்துள்ளார்.


தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் மூலம், விடுபட்ட கல்வியை மீண்டும் தொடர மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,  அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் வழியாக 10 - ஆம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெறுவதற்கு மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரு கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் என்ற அமைப்பு கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், இடையில் விடுபட்ட பள்ளிக் கல்வியைத் தொடர்ந்திடவும், தம்முடைய இளம் வயதில் பள்ளியில் படிக்க இயலாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. 
விரும்பியப் பாடத்தை விரும்பிய நேரத்தில் படித்துத் தேர்ச்சி பெறவும், பள்ளிப் பாடங்களுடன் தொழிற்கல்வி பயிலுவதற்கும் அரிய வாய்ப்பாகும். மிகக் குறைவான சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களோடு முந்தைய கல்வி முறையில் பெற்ற இரண்டு பாடங்களின் மதிப்பெண்கள் அல்லது ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்களை உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை இக்கல்வித்திட்டம் பெற்றுள்ளது. 
தங்களுடைய அடிப்படைக் கல்வியைப் பெற இயலாதவர்கள் இதன் மூலம் பயனடையலாம். இதற்கு உச்ச வயது வரம்பு கிடையாது. 14 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும். இதனுடைய சிறப்பம்சம்  என்னவென்றால், தங்களுக்கு விருப்பமான 5 பாடங்களை தேர்ந்தெடுத்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து எளிதாக தங்களுடைய அடிப்படைக் கல்வியைப் பயில இயலும். மேலும், கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களை கடினமாக நினைக்கும் மாணவர்கள் அந்த நிலையை மாற்றி அவரவர் திறமைக்கேற்றாற்போல் தமக்குப் பிடித்த வேறு ஏதேனும் 5 பாடங்களை படிக்க முடியும். இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் உகந்ததாக இருக்கும். 
இக்கல்வித் திட்டத்தை மாவட்டத்துக்கு குறைந்தது 5 பள்ளிகளில் முனைப்புடன் செயல்படுத்த சிறுபான்மையினர் நல இயக்ககம் முயற்சி எடுத்து வருகிறது. 10 ஆம் வகுப்பு என்பது ஓர் அடிப்படை கல்வித் தகுதியாக உள்ளதால், வேலைவாய்ப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் பயனுள்ளதாக அமையும். மேலும், இக்கல்வி முறையைப் பற்றித் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி இதனை ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
மேலும் விரிவான விவரங்களுக்கு மண்டல இயக்குநர், தேசிய திறந்த நிலைப்பள்ளி  நிறுவனம்,   லேடி வில்லிங்டன் வளாகம், காமராஜர் சாலை,  திருவல்லிக்கேணி, சென்னை - 600 005, தொலைபேசி எண்: 044 - 28442239 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com