இன்று  நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல்

நாமக்கல்  தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுவதையொட்டி,  பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்


நாமக்கல்  தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுவதையொட்டி,  பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் சங்க உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக  நான்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 1970 - ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட  நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு,  மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருந்த நிலையில்,  முன்னாள் தலைவர் கே.எல்.எஸ்.நல்லதம்பி, அச் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.  தன்னை சங்கத்தில்  மீண்டும் இணைக்கக் கோரி,  அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.  நீதிமன்றத் தீர்ப்பு நல்லதம்பிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், தற்போதைய நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால்,  அதற்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொண்டனர்.  தேர்தல் பொறுப்புக் குழுத் தலைவராக, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலத்தை நியமித்தனர்.  கடந்த மாத இறுதியில் வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.   தற்போதைய செயலாளரான அருள் மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்த நிலையில்,  சங்க விதிகளுக்கு முரணாக அவரது மனு உள்ளதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.  இதனால், அவரை எதிர்த்துப் போட்டியிடும் நல்லதம்பி ஆதரவாளரான ஆர்.கே.ரவி போட்டியின்றி செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேர்தலில், தற்போதைய தலைவர் வாங்கிலி தலைமையில் ஓர்  அணியிலும்,  கே.எல்.எஸ். நல்லதம்பி ஆதரவாளர்கள் மற்றோர் அணியிலும் இடம் பெறுகின்றனர். மேலும், இதுவரை செயற்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வான நிலையில்,  இம் முறை 50 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தலைவர், உபதலைவர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 50 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய மொத்தம் உள்ள 4,792 உறுப்பினர்களும்,  54 வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக,  நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒரு சாவடியில் 25 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  ஒரே நேரத்தில் 25 பேர் வாக்களித்துவிட்டு வரும் வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓர் உறுப்பினர் வாக்களித்துவிட்டு வர 10 நிமிடங்களாகலாம். தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது. 
அதன்பின் 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று,  அன்று இரவு  வெற்றி பெற்ற நிர்வாகிகள் விவரங்கள்  தெரியவரும்.  தேர்தலில் மோதல்,  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com