நாமக்கல்

லாரியில் தடுப்புக் கம்பி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

31st Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே பொக்லைன் ஏற்றிச் சென்ற லாரியில் தடுப்புக் கம்பி சிக்கியதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக வாகனங்களில் அதிக உயரம் கொண்ட பொருள்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்கும் பொருட்டு, இரும்பு தண்டவாளக் கம்பியால் நெடுஞ்சாலைத் துறையினரால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல்லுக்கு பொக்லைன் வாகனத்தை லாரியில் ஏற்றி வந்தனர். பாலத்தின் கீழ் பகுதியில் லாரி சென்ற போது, ஓட்டுநர் தடுப்புக் கம்பி இருப்பதை கவனிக்காமல் இயக்கினார். அப்போது இரும்பு கம்பி சரிந்து பொக்லைன் இயந்திரத்தின் ஒரு பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால் லாரியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு அருகில் உள்ள இணைப்புச் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்த வேளையில், அந்த வழியாக வந்த காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உடனடியாக இரும்புக் கம்பியை வெல்டிங் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் இரும்புக் கம்பியை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
 சுமார் 2 மணி நேரத்துக்கு பின் அந்த வழியே வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT