முதல்வர் பொது நிவாரண நிதி ரூ.4 லட்சத்தை, இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்த 471 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியர், அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், ஒலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆறுமுகம் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையினையும், ராசிபுரம் வட்டம், பெரப்பஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் கிணறு தூர்வாரும் போது மண் சரிந்து உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையினையும் ஆட்சியர் வழங்கினார்.
அதன்பின், கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக ஓய்வூதியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு தலா ரூ.5,342 வீதம் ரூ.28,710 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகளை அவர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரு மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான உபகரணங்களும், 1 மாற்றுத் திறனாளிக்கு ஒளிரும் நவீன மடக்கு குச்சியையும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளும், 22 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும் என ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) மு.இலாஹிஜான் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.