குமாரபாளையம் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம், பண்ட அள்ளியைச் சேர்ந்த துரைசாமி மகன் செல்வம் (50), ஜவுளி வியாபாரி. இவர் தனது மருமகன் சிவசங்கருடன் (27) ஈரோடு ஜவுளி சந்தைக்கு காரில் திங்கள்கிழமை சென்றார். சங்ககிரி-ஈரோடு சாலையில் உப்புபாளையம், தோப்புக்காடு அருகே சென்ற போது, எதிர்பாராமல் சாலையோர மரத்தின் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவசங்கர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மற்றொரு விபத்து: கேரள மாநிலம், ஆலப்புழாவை அடுத்த ஹரிமங்கலத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் ஹரிகிருஷ்ணன் (21), கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா (21) இருவரும் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள கல்லூரியில் வணிக மேலாண்மைக் கல்வி பயின்று வருகின்றனர்.
இருவரும் கல்லூரிக்குச் செல்வதற்காக திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்றனர். குமாரபாளையத்தை அடுத்த வீராச்சிபாளையம் அருகே சென்ற போது, அவ்வழியே சென்ற தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில், பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட ஆதித்யா, மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விபத்துகள் குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.