நாமக்கல்

குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு  

30th Jul 2019 09:41 AM

ADVERTISEMENT

கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செய்யாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை காலை காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் பத்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய சூழல் உள்ளது. காவிரி ஆற்றங்கரையோரப் பகுதியில் வசித்தபோதும் தண்ணீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. செய்யாம்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதால், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பேருந்து வசதி கோரி மனு: மோகனூர் வட்டம், குரும்பப்பட்டி பகுதிக்கு காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து வசதியில்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரும், வேலைக்கு செல்வோரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நாமக்கல்லில் இருந்து வளையப்பட்டிக்கு செல்லும் அரசுப் பேருந்தை புதுப்பட்டி வழியாக காலை 8.15 மணியளவில் குரும்பப்பட்டியில் இருந்து வளையப்பட்டிக்கும், மாலையில் 5,30 மணிக்கு வளையப்பட்டியில் இருந்து குரும்பப்பட்டிக்கும் விட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கக் கோரிக்கை: வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவைப் போற்றும் வகையில், நாமக்கல் நேரு பூங்காவில் கட்டபொம்மனுக்கு வெண்கல சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் இடம், அனுமதி கொடுத்தால் சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என நாமக்கல் மாவட்ட விடுதலைக் களம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
 இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு: ராசிபுரம் தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்மைதீன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். அதில், தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
 சாலையை சீரமைக்க வலியுறுத்தல்: மோகனூர் வட்டம், என்.புதுப்பட்டி ஊராட்சி, ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. சாலையை சீரமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டினர். அதன்பின் எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை.
 எனவே, உடனடியாக அப்பகுதியில் புதிய சாலை அமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT