நாமக்கல்

சுதந்திர தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

29th Jul 2019 08:31 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், நாட்டின் சுதந்திர தினவிழா வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  
இக் கூட்டத்தில், சுதந்திர தின விழாவில் மாணவ,  மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு,  பொதுமக்கள் விழாவுக்கு வருகை புரிவதற்கு வசதியாக, நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து,  ஆட்சியர் வளாகம் வரையிலான பேருந்து வசதி,  காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் அனைத்து துறைகள் மூலம் விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 
வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, பட்டு வளர்ச்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
சுதந்திர தின விழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
இதனைத் தொடர்ந்து, வல்வில் ஓரி விழாவுக்கான பணிகள்  குறித்தும் அதிகாரிகளிடம்  ஆட்சியர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில்,  நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT