நாமக்கல்

வாடகையில் இயங்கும் 12 அரசு அலுவலகங்கள் விரைவில் புதிய கட்டடத்துக்கு மாற்றம்

27th Jul 2019 09:04 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 12 அரசுத்துறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டடத்துக்கு விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளன.
 ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து, கடந்த 1997 - ஆம் ஆண்டு நாமக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 70 - க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டக் காவல் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட தொழில்மையம், வனத்துறை அலுவலகம், விளையாட்டுத்துறை அலுவலகம், மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
 இருப்பினும், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தாட்கோ அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம், வேளாண் விதை சான்றுத்துறை அலுவலகம் உள்ளிட்ட 12 அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து அலுவலகங்களையும் கொண்டு வரும் பொருட்டு, ரூ.14 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் தரைத்தளம் உள்பட மூன்று அடுக்குகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், கட்டடப் பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் அதற்கான பணிகளை செய்து வருகிறது. 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: நாமக்கல் நகரப் பகுதியில், வாடகை கட்டடங்களிலும், பள்ளிகளிலும் இயங்கும் அரசுத்துறை அலுவலகங்களை, ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் கொண்டு வரும் பொருட்டு, ரூ.14 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. தரைத்தளம் உள்பட நான்கு தளம் கட்டப்பட்டுள்ளன. சாலை அமைப்பது, மரம் நடுவது, பெயர் பலகை பொருத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பணிகள் முடிவடைந்து விடும். அதன்பின் ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்படும். தற்போதைக்கு 12 அலுவலகங்கள் புதிய கட்டடத்தில் செயல்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த அலுவலகங்கள் இங்கு வர இருக்கின்றன என தெரியவில்லை. கல்வித்துறை, அறநிலையத்துறை, வேளாண்துறை அலுவலகம் வருவதாக தெரிகிறது. மற்ற அலுவலகங்கள் வருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தான் முடிவெடுப்பார் என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT