நாமக்கல்

புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமானப் பணி 2024-க்குள் நிறைவடையும்

22nd Jul 2019 10:44 AM

ADVERTISEMENT

தமிழகத்தில்  அமைக்கப்பட்டுவரும்  அனல் மின்நிலையம் மூலம் 6,200 மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்தப் பணி வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
குமாரபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: -
தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி போதுமான அளவு உள்ளதால் தடையின்றி மின்சாரம்  வழங்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்தின் அனல் மின்நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  தற்போதுள்ள  அனல் மின்நிலையங்கள் மூலம் 4,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அனல் மின்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.  இதனால் மின்தட்டுப்பாடு ஏற்படாது.  புதிதாக 6,200 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின்நிலையங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும்.
மழைக்காலம் தொடங்க உள்ளதால் தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில், 2  இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT