நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, ரூ.ஒரு கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் ரூ.35 கோடியில் கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2019-20-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.ஒரு கோடி அளவில், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளன. தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்விக் கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வட்டங்கள் வாரியாக நடைபெறுகிறது.
அதன்படி, வரும் 23-ஆம் தேதி நாமக்கல் (காலை 11 மணி), மோகனூர், பரமத்திவேலூர் (பிற்பகல் 3 மணி), 24-ஆம் தேதி திருச்செங்கோடு (காலை 11 மணி), குமாரபாளையத்தில் (பிற்பகல் 3 மணி), 25-ஆம் தேதி, ராசிபுரம் (காலை 11 மணி), சேந்தமங்கலம் (பிற்பகல் 3 மணி) ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருப்பின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவர திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது (சலான்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.