எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை துணைச் செயலர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் துணைச் செயலர் மருத்துவர் அனு திங்கள்கிழமை நாமக்கல் வந்தார். அவர், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
இப்பேரணியானது அரசு மகளிர் பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் ஜல்சக்தி அபியான் தொடர்பான மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வள ஆதாரங்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக் குழுவினர், அரசுத் துறை அலுவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, அலங்காநத்தம் அரசுப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக் கன்று நடும் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சேந்தமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுத் துறை துணைச் செயலர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள், வேளாண் துறையினர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருச்செங்கோட்டில்...
எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் கொன்னையார் கிராமங்களில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வே.சாந்தா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) டி.சரவணன், ஊராட்சி செயலர்கள் என்.பொன்னுவேல், வீ.கருணாகரன், கோக்கலை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், புதுவாழ்வு திட்ட உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்து
கொண்டனர்.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.