நாமக்கல் கந்தகிரி மலை அடிவாரத்தில், ஸ்ரீ வில்வ லிங்கேஸ்வரர் சிலை பிரதிஷ்டை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டியில், கந்தகிரி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வில்வ லிங்கேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டதுடன், 108 சங்குகள் கொண்ட சங்காபிஷேகம், சப்த கன்னிகள் பூஜை மற்றும் கோமாதா பூஜை நடைபெற்றது. முன்னதாக, அங்குள்ள விநாயகருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ் விழாவில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கேஸ்வரரை வழிபட்டனர். தொடர்ந்து, அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.