இந்திய நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் பாஜக ஆட்சியில் பேராபத்து ஏற்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தா.பாண்டியன் மேலும் பேசியது : அதிமுக பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா, தனது தொண்டர்கள் மீது நம்பிக்கை கொண்டு தனித்து தேர்தலை எதிர்கொண்டார். ஆனால், ஜெயலலிதா புறக்கணித்த பாஜகவை, இலை போட்டு அழைத்து அதிமுகவினர் ஏற்றுக் கொண்டதால் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தகுதித் தேர்வு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக சட்டப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களை பாஜக அரசு புறக்கணித்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டும் என்பதில் எப்போதும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அறிவியலையும், பகுத்தறிவையும் ஏற்றுக் கொண்டு சமதர்ம வாழ்வை கட்டமைக்க வேண்டும்.
8- வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அத் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. இதில், மத்திய அரசின் அழுத்தம் அதிகமுள்ளதே காரணம். இந்திய ஜனநாயகத்துக்கும், போராடிப் பெற்ற சுதந்திரத்துக்கும் பாஜக ஆட்சியில் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தை அழிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இதனைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைத்து பாடுபட வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து போராடும் என்றார்.
இக் கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலர் எஸ்.பி.கேசவன் தலைமை வகித்தார். மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.மணிவேல், மாவட்டச் செயலர் ஆர்.குழந்தான், நிர்வாகிகள் ப.பா.மோகன், எஸ்.ஈஸ்வரன், என்.மணி, பி.அர்த்தநாரி, எஸ்.ஏ.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.