நாமக்கல்

மதுக்கடையை முற்றுகையிட்டு திமுகவினர் தர்னா

12th Jul 2019 10:22 AM

ADVERTISEMENT

குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகக் கூறி எடப்பாடி சாலையில் உள்ள மதுக்கடைக்கு முன்பாக அமர்ந்து திமுகவினர் தர்னாவில்
ஈடுபட்டதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. 
குமாரபாளையம் நகரில் பல்வேறு பகுதிகளில் 9 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளுக்கு அருகாமையில் சட்டவிரோதமாக இயங்கும் பார்களில் தடையின்றி மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெற்று வருவதாகவும், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஓரிரு நாள்கள் மூடப்படுவதும், பின்னர் தொடர்ந்து விற்பனை நடைபெறுவதாகவும், சட்டவிரோத மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், எடப்பாடி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகேயுள்ள பாரில் வியாழக்கிழமை அதிகாலை மது விற்பனை நடைபெற்றுள்ளது. 
இதைக் கண்ட திமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு அம் மதுக்கடைக்கு முன்பாக அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதற்கு, பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். 
ஆனால், பலமுறை புகார் மனு அளித்தும் முறையாக நடவடிக்கை எடுக்காத நிலையில், முழுமையாக சட்டவிரோத மதுவிற்பனை நிறுத்தப்படும் என உறுதியளிக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர். இந்நிலையில், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.சண்முகம், போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாவட்ட துணைச் செயலர் எஸ்.சேகர், நகரச் செயலர் கோ.வெங்கடேசன் மற்றும் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தினார். 
குமாரபாளையம் நகரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் திமுகவினர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால், சுமார் நான்கு மணி நேரம் எடப்பாடி சாலையில் மதுக்கடை முன்பாக பரபரப்பு நிலவியது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT