நாமக்கல்

கொல்லிமலையில் ஆக. 2, 3-இல் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி: ஆட்சியர்

12th Jul 2019 10:25 AM

ADVERTISEMENT

கொல்லிமலையில் ஆகஸ்ட் 2, 3 தேதிகளில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற இருப்பதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி உள்ளிட்டவை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் அவர் பேசியது; கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியைப் போற்றிடும் வகையில்,  ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, கொல்லிமலையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல், இந்த ஆண்டும் வரும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் அங்குள்ள வல்வில் ஓரி அரங்கில் விழா நடைபெறவுள்ளது. 
இவ் விழாவையொட்டி காவல் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை,  பட்டு வளர்ச்சித் துறை, குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை, சித்த  மருத்துவத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.  இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சியை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்  ஆட்சியர்.
கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், நாமக்கல் சார்- ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT