பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்பு மற்றும் சோளத்தட்டைகள் எரிந்து நாசமாயின.
ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் தனது தோட்டத்தில் சோளத்தட்டைகளை அறுவடை செய்து காய வைத்திருந்தார். சோளக்காட்டுக்கு மேல் செல்லும் மின் கம்பியில் உரசல் ஏற்பட்டுள்ளது. இதில் கீழே காய வைத்திருந்த சோளத்தட்டில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த ரமேஷின் உறவினர் அர்த்தநாரியின் (65) கரும்பு காட்டிலும் பரவியது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மேலும் பரவால் தடுத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுகள் மற்றும் கரும்புகள் எரிந்து நாசமாயின.