நாமக்கல்

பரிசோதனைக்குப் பின் விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

4th Jul 2019 09:41 AM

ADVERTISEMENT

விதைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் தரமறிந்து விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் எஸ்.சித்திரைச் செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: தரமான விதையாக இருந்தால் மட்டுமே, அதிக மகசூலை பெற முடியும். பயிர் எண்ணிக்கையை அதிகளவில் பெறவும், திடமான நாற்று மற்றும் பயிரினை பெறுவதற்கும்  விதையின் தரம் அவசியம். சான்று பெற்றுள்ள விதைகளையே ஒவ்வொரு சாகுபடிக்கும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். சேமித்து வைக்கப்பட்டுள்ள விதைப் பயிரை சாகுபடிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், விதைக்கும் முன்பாக அவற்றை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அவ்வாறு பரிசோதனை முடிவில் சாகுபடிக்கு பயன்படுத்தலாம் என்ற முடிவு வந்தால் மட்டுமே அவற்றை பயன்படுத்த வேண்டும்.  விதையின் முளைப்புத் திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு பரிசோதனை, ஈரப்பதம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் ஒவ்வொரு பயிரும் தரமுள்ளதா, தரமற்றதா என அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைகளுக்காக, நாமக்கல் குளக்கரைத் தெருவில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில், ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  விவசாயிகள், தங்கள் விதைக் குவியல்களில் இருந்து, குறிப்பிட்ட விதை மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன்பின் விதைப்பு பணிகளில் ஈடுபடுவது பயனுள்ளதாக அமையும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT