நாமக்கல்

காவிரி பாலம் அருகே எச்சரிக்கை பலகை 

4th Jul 2019 09:39 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலாக உள்ள பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே அடிக்கடி குப்பைகளை கொட்டி எரிப்பதால் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் என கடந்த மாதம் 24-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, வேலூர் பேரூராட்சி சார்பில் பெயரளவில் எச்சரிக்கை தட்டி மட்டும் வைக்கப்பட்டுள்ளது.
கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் காவிரி பாலத்தை கடந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக,சுற்றுலா மற்றும் சொகுசு வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள காகித ஆலைக்கும்,பல்வேறு நூட்பு ஆலைகளுக்கும், பள்ளி,கல்லூரிகளுக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். 
இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் இருந்து பரமத்தி வேலூர் நகர் பகுதிக்குள் வரும் பிரிவு சாலை அருகே அடிக்கடி கோழிக் கழிவுகள்,திருமண மண்டபங்களில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள்,குப்பைகள் உள்ளிட்டவைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிவதோடு மட்டுமல்லாமல், அதிலிருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அப் பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.  
எனவே விபத்துக்களை தவிர்க்கவும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும் குப்பைகளை அப்புறப்படுத்தி அப் பகுதியை வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் பராமரிக்க வேண்டுமென தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் அடிபடையில் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் அப் பகுதியை முழுமையாக சுத்தம் செய்யாமல் இரு வேறு இடங்களில் முக்கிய அறிவிப்பு, இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது, மீறினால் தண்டிக்கப்படுவீர்கள். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகளை வைத்துள்ளனர். முழுமையாக அப் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, மரக்கன்றுகளை நட்டு பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT