ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக, ரூ.9.40 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விஷம் அருந்திய நிலையில் இளைஞர் மனு அளிக்க வந்தார்.
நாமக்கல்-திருச்சி சாலை எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவர் திங்கள்கிழமை காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது தனக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எறும்பு சாக்பீஸை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளேன் என்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள போலீஸாரிடம் செந்தில்குமார் கூறினார். அதையடுத்து, அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்சியரிடம் செந்தில்குமார் அளிக்க வந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மூன்று ஆண்டுகளாக ஷோபா தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறேன். கரூர் மாவட்டத்துக்குள்பட்ட குளித்தலை மலையப்ப நகரைச் சேர்ந்த அலாவுதீன், எனது சகோதரிக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று கூறியதை நம்பி, முன்பணமாக, ரூ.4.40 லட்சமும், வங்கிக் கணக்கு மூலம் ரூ.3 லட்சம், ரொக்கமாக ரூ.1.40 லட்சம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கித்தரவில்லை.
அதேபோல், எனது நண்பர் ராஜ்குமார், தனது தங்கையின் ஆசிரியர் வேலைக்காக எனது வங்கிக் கணக்கு மூலம் ரூ.4 லட்சம், கையில் ரொக்கமாக ரூ.ஒரு லட்சத்தை அலாவுதீனிடம் கொடுத்தோம். ஆனால், அவர் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வருகிறார்.
எனவே, அவர் ஏமாற்றிய ரூ.9.40 லட்சத்தை திரும்பப் பெற்றுத் தருவதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.